மூட்டுவலி போக்கும் முடக்கத்தான்!

FOR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/ or write to us goodwill@writeme.com

‘காத தூரம் நடக்கிறதுக்குள்ள கால் வலி பின்னிப் பெடலெடுக்குதே பாட்டி? உன்னால மட்டும் எப்படி இந்த வயசுலயும் நடந்தே கோயிலுக்கெல்லாம் போயிட்டு வர முடியுது?’

‘வயசானாலே கொஞ்சம் மூட்டுவலி வரத்தான் செய்யும். ஆனா, ரொம்ப தொல்லை தர்றதுக்கு முன்னாலேயே, பக்குவமா வைத்தியம் பார்த்துக்குவேன்ல…’

‘அது என்ன பக்குவம்… எனக்கும் கொஞ்சம் சொல்லேன்’

‘வயசானாலேயே, மூட்டுக்கு இடையில் இருக்கிற சவ்வு கொஞ்சம் உலர்ந்து, எலும்புகளுக்கு உள்ள இடைவெளி குறைஞ்சு வலி எடுக்க ஆரம்பிச்சிடும். கவனிக்காமல் விட்டால், கால் மெதுவாக வளைஞ்சுகூட போகும். ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ்-ங்கிற மூட்டுவலிதான் அது.’

‘பென்குயின் பாட்டி… அதான், உன் ஃப்ரெண்ட் பெயின்குயின் மாதிரியே நடப்பாங்களே. கால் வலியினால் தான் அவங்க அப்படி நடக்கிறாங்களா பாட்டி?’

‘ஆமா. ஆனா, மூட்டு தேயறதுக்குள்ள முன்ஜாக்கிரதையா நாம் முந்திக்கணும். எடை அதிகரிக்காமப் பார்த்துக்கணும். மாதவிடாய் முடியும் சமயத்துல இருந்தே உணவில் கால்சியம் நிறைய சேர்க்கணும். ‘புளி துவர் விஞ்சிக்கின் வாதம்’. அதனால், புளிப்பு சுவையுள்ள வத்தக் குழம்பு, புளியோதரை எல்லாம் கூடாது. வாய்வு தரக் கூடிய உருளைக்கிழங்கு, தரைக்கு அடியில் விளையற கிழங்குகள், காராமணி, கோஸ், இதெல்லாம் குறைவாதான் சேர்த்துக்கணும்.’

‘என்ன சேர்க்கலாம். அதை முதல்ல சொல்லுங்க’

‘கால்சியம், இரும்புச் சத்துள்ள தானியங்களை கஞ்சி, கூழ், அடை செய்து சாப்பிடலாம். கம்பங் கூழுக்கு மோரும், சின்ன வெங்காயமும் சூப்பர் காம்பினேஷன். உடலுக்கு நன்மை தர்ற புரோ பயாட்டிக் ஆன்டிஆக்சிடன்ட் டானிக்கும் கூட.

முடக்கத்தான் (முடக்கறுத்தான்) கீரை, மூட்டு வலிக்கு ரொம்ப நல்லது. யூரிக் அமிலம் அதிகரித்து வர்ற ‘கவுட்’ நோய்க்கு இது கை மேல் பலன்கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள், முடக்கத்தானில் உள்ள ‘தாலைட்ஸ்’ என்ற ரசாயனம் குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைச்சிருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைச்சு, சிறுநீரகத்துக்கு எடுத்துட்டுப் போயிடும். சிறுநீரகம் இதை வெளியேற்றும்போது, சோடியத்தையும், பொட்டாஷியத்தையும் நம் உடம்பிலேயே விட்டுவிடுமாம். இது, ஒருமிக முக்கிய இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துமாம். இதனால், உடல் சோர்வு ஏற்படாது. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறதாம்.’

‘முடக்கத்தான் கீரையை எப்படி சாப்பிடணும் பாட்டி?’

”கீரையைத் தண்ணீர்ல போட்டுக் கொதிக்க வைச்சா, அதுல இருக்கிற மருத்துவ சத்துக்கள் அழிஞ்சிடும். பொடியா நறுக்கி, தோசை மாவோட கலந்து, தோசையா செஞ்சு சாப்பிடலாம்.’

‘மூட்டுவலி இருக்கிறவங்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்னு சொல்றாங்களே..?’

‘அப்படி இல்லை. ஆனால், மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அதை முதல்ல சரி செய்யவேண்டியது ரொம்ப அவசியம். ‘விரேசனத்தால் வாதம் தாழும்’னு ஒரு சித்த மருத்துவ மொழி கூட இருக்கு.’

‘விரேசனம்னா என்ன பாட்டி?’

‘பேதி உண்டாக்க மருந்து கொடுப்பது. நாடி, உடல் வன்மை பார்த்து விளக்கெண்ணெயில் ஆரம்பித்து, பல வகை பேதி மருந்துகளை சித்த மருத்துவர்கள் கொடுப்பாங்க. அதை ஒரு நாள் எடுத்துக்கிட்டா, நல்லா 7 – 10 தடவை பேதி ஆகி, உடலின் வாதத் தன்மை குறைஞ்சிடும். அதுக்குப் பிறகு தகுந்த வைத்தியம் பார்த்துக்கிட்டா, மூட்டுவலி சீக்கிரத்திலேயே குறையும். ஆனால், மருத்துவரோட ஆலோசனை இல்லாமல் இதைச் சாப்பிடக் கூடாது.”

”நீ, தினமும் ராத்திரி, ஒரு பொடியை பால்ல போட்டு சாப்பிடுவியே… அது எதுக்கு பாட்டி?”

‘அமுக்கராங்கிழங்கு பொடி. பாலில் வேக வைச்சு தூளாக்கிய பொடி. இந்தப் பொடியைச் சாப்பிட்டால், மூட்டுகளுக்கு இடையே இருக்கிற அழற்சி நீங்கி வலியும் குறையும். கூடவே நொச்சி, தழுதாழை, ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெய் அல்லது, வாத கேசரி தைலத்தில் நல்லா வதக்கி, மூட்டுக்கு ஒத்தடம் கொடுத்தாலும் வலி சீக்கிரமே போயிடும்.

கால் வலியோட வீக்கம் இருந்தால், முருங்கை இலை, தேங்காய் துருவல், வலம்புரிக்காய், ஓமம், நொச்சித்தழை, ஆமணக்கு இலை, தழுதாழை, இதையெல்லாம் ஒரு காடா துணியில் பொட்டலமாக் கட்டி ஒரு கடாயில், நாராயணத் தைலத்தை லேசாக இளஞ்சூடாக்கி, அதில் இந்த பொட்டலத்தைப் போட்டு, அந்த எண்ணெயில் லேசாய்ப் பிரட்டணும்.  அதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் போகும்; வீக்கமும் மறையும். ஆவாரை இலை, வேலிப்பருத்தி இலை இரண்டையும் தூளாக்கி, முட்டை வெள்ளைக்கரு (சைவமா இருந்தால் உளுத்தமாவு) கலந்து, மூட்டுல பத்து போட்டு அடுத்தநாள் கழுவினால் வீக்கம் மறைஞ்சிடும். ‘ஃப்ரோஸன் ஷோல்டர்’ என பாடாய்ப் படுத்தும் தோள் மூட்டில் வரும் வலிக்குக் கூட இந்த பத்துதான் பெஸ்ட்.’

‘பாட்டி நீ வெறும் ஆத்தா இல்லை… ஆர்த்தாஃபிசிஷியன்தான் போ!’

FOR ENGINEERING & OTHER COLLEGE BOOKS VISIT http://pickyourbooks.wordpress.com/ or write to us goodwill@writeme.com

Leave a comment